2000ரூ நோட்டுக்கள்

இன்று உலகமே மோடியின் கறுப்புப் 
பண வேட்டை குறித்து பெருமையடையும் இந்த 
சமயத்தில் நாமும் அது குறித்து ஆராய்ந்தோம். 
அதிர்ச்சிகரமான, மகிழ்ச்சிகரமான பல செய்திகள் 
கிடைத்தன.
இந்த திட்டம் இன்று நேற்று போடப்பட்ட திட்டமல்ல. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட திட்டம். அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலும் படியுங்கள்.
குஜராத்தில் ஒரு சிறுவன் வீட்டுக்கு வெளியே 
விளையாடிக் கொண்டிருந்தபோது அவரது தாய் 
அவனுக்கு ஒரு 2ரூபாய் நோட்டை கொடுத்திருக்கிறார். 
வீட்டுக்கு வெளியில் அதை மறந்து வைத்துவிட்டு 
உள்ளேபோய்விட்டான் சிறுவன். இரண்டு நாட்கள் 
வெளியில் கிடந்த அந்த நோட்டு வெயிலில் கறுத்துப் 
போய்விட்டது. அந்த சிறுவனுக்கு திடீரென நிஜாம் பாக்கு 
திங்க ஆசை. குஜராத் முழுவதும் அலைந்தும் எந்த 
பெட்டி கடைக்காரருமே அந்த கறுப்பு நோட்டை 
வாங்கவில்லை. அந்த நோட்டின் மீது அந்த சிறுவனுக்கு 
வெறுப்பு கூடியது. அன்றுதான் இந்தியா முழுதும் 
இருக்கும் கறுப்புப் பணத்தை ஒருநாள் ஒழிப்பேன் என 
முடிவு செய்தான் அந்த சிறுவன். அதேபோல் 
60ஆண்டுகள் கழித்து பிரதமர் ஆகி, எல்லா 
நோட்டுகளையும் செல்லா காசாக்கி, நிஜாம்பாக்கு 
கலரிலேயே புது நோட்டுக்களை அச்சடித்தான் அந்தச் 
சிறுவன். அந்தச் சிறுவன் வேறுயாருமல்ல..... 
அவர் யாரென்று உங்களுக்கே தெரியும். அந்த தாய் வேறு யாருமல்ல அவ்வப்போது நம் பிரதமருடன் போஸ் கொடுப்பாரே அந்த தாய்தான் அவர்.
இந்த 2000ரூபாய் நோட்டில் சாட்டிலைட் சிப் இருப்பதாக ஒரு தகவல் முதலில் நமக்கெல்லாம் வந்தது. பின்னர் அந்த தகவல் பொய் என்று ரிசர்வ் வங்கியே சொன்னது. ஆனால் நாங்கள் ஆராய்ந்து பார்த்தபோது சிப் இருப்பது உண்மைதான் என்பது தெரியவந்தது. பிறகு ஏன் சிப் இல்லை என்று நம்மிடம் பொய் 
சொன்னார்கள்? வாழ்க்கையில் பொய்யே சொல்லாத மோடி ஏன் மக்களிடம் பொய் சொன்னார்? மோடியின் ராஜதந்திரமும், தியாகமும் அங்குதான் உள்ளது. தொடர்ந்து படியுங்கள்.
புதிதாக அடிக்கும் 2000ரூ நோட்டுக்குள் (பவர்ட் பை நிஜாம் பாக்கு) சிப் வைக்க மோடி முடிவு 
செய்தபின் ரிசர்வ்பேங்க் கவர்னரையும், பல சிப்ஸ் 
கம்பனிகாரர்களையும் அழைத்து பேசினார். "ரூபாய் நோட்டுகளுக்குள் நேந்திரம் சிப்ஸ் வைக்கலாம். நரேந்திரமோடி என்ற பெயரில் இருக்கும் 'நரேந்திரம்' என்ற வார்த்தையில் இருந்தே நேந்திரம் உருவானது என 'அங்கிள் சிப்ஸ்'காரர்கள் சொல்லிருக்கிறார்கள். முதலில் "வித்தியாசமா கூவுறான்டா இவன்," என நெகிழ்ந்த மோடி நேந்திரம் சிப்ஸ் ஒருமாதத்தில் கெட்டுவிடும் என அறிந்தபின் அந்த யோசனையை விட்டுவிட்டாராம்.
பின்னர் ஏலம் முறையில் டெண்டர் விடப்பட்டு Lays கம்பனிக்காரர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டார்கள். Lays கம்பனியும் 25கோடி சிப்ஸ்களை நான்கு வகையான ஃபிளேவர்களில் 
தயார் செய்து மோடி வீட்டில் இறக்கிவைத்துவிட்டது. திடீரென அடுத்தநாள் அதிகாலை அவர்களை 
அழைத்த மோடி, "ஆர்டர் கேன்சல்... " என சொல்லியிருக்கிறார். "சார் payment சார்?" என கேட்ட Lays கம்பனிகாரர்களை "தேசதுரோகிகளே," என திட்டிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.
ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு அதிர்ச்சி. "என்ன சார் இது? கான்சல் பண்ணிட்டீங்க?" என அவர் கேட்டபோது மோடி, "நல்லா சாப்பிடுங்க மார்த்தாண்டாம்," என பலமாக சிரித்தபடியே தன் திட்டத்தை சொல்லத் துவங்கினார்.
"ரிசர்வ் பேங்க் கவர்னர் அவர்களே... நீங்கள் ஒரு 
குழந்தையின் சாக்கலேட்டை பிடிங்கி அலமாரியில் ஒளித்து வைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 'உன் 
சாக்கலேட்டை அலமாரியில் ஒளிச்சு வச்சுட்டேனே', என 
அந்த குழந்தையிடம் சொன்னால் அந்தக் குழந்தை 
சாக்கலேட்டை அலமாரிக்கு போய் எடுத்துவிடும் 
அல்லவா?"
"ஆமாம் சார்." என்றார் ரி.வ.கவர்னர்
"அதுபோல் தான் இதுவும். இந்த சிப்ஸ் வைக்கப்பட்ட பணத்தை 120 அடியில் புதைத்து வைத்தால் சாட்டிலைட் 
கண்டுபிடித்துவிடும். ஆனால் இந்த விஷயம் வெளியே 
தெரிந்தால் மக்கள் தங்கள் பணத்தை 121அடியில் புதைத்து வைக்க வாய்ப்புண்டு. அதனால் இது சீக்ரெட்டாக இருக்கவேண்டும். இன்று இரவு என் வீட்டுக்கு அச்சடித்த புதிய 2000ரூ நோட்டுக்கள் எல்லாவற்றையும் 
கொண்டு வந்து விடுங்கள். நீங்களும் நானுமே நம் 
கைகளால் சிப்ஸ்களை பொறுத்திவிடுவோம். மறக்காமல் 
கத்தரிக்கோலும், ஃபெவிகாலும் கொண்டுவாருங்கள்," என சொல்லிவிட்டு கோட் மாத்த உள்ளே போய்விட்டாராம் பிரதமர்.
பிறகு அன்று இரவு இருவரும் FMயில் பழைய இந்தி பாடல்களை கேட்டுக்கொண்டே எல்லா நோட்டுகளிலும் சிப்ஸ்களை வைத்திருக்கிறார்கள். விடிய விடிய ஒட்டிவிட்டு தூங்காமல் கூட ஜப்பான் கிளம்பி போயிருக்கிறார் பிரதமர்.
இப்படி ஒரு பிரதமர் கிடைக்க நாம் என்ன புண்ணியம் 
பண்ணியிருக்க வேண்டும் யோசித்துப்பாருங்கள். நம் 
வீட்டு கல்யாணங்களில் வெத்தலை, தேங்காய் தாம்பூல பாக்கெட் போடவே நாமெல்லாம் சலித்துக்கொள்வோம். ஆனால் ஒரு பிரதமர் இதை நமக்காக செய்திருக்கிறார். நாமோ இன்று பேங்க் வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் நிற்க சலித்துக்கொள்கிறோம். நீங்கள் உழைத்து சம்பாதித்த காசு தீடிரென செல்லாமல் போய்விட்டால் பிச்சைக்காரர்கள் ஆகிவிடுவீர்களா என்ன? அல்லது ஒரு நூறுநாள் சாப்பிடவில்லை என்றால் உயிரா போய்விடும்? எதை நாம் கொண்டுவந்தோம்? அதை நாம் இழப்பதற்கு? போனால் போகட்டுமே. நாட்டுக்காகத்தானே...
இந்த தகவலை சொல்ல எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் ஒரு நல்ல மனிதரின் தியாகம் நம் மக்களுக்கு தெரியாமல் போய்விடக்கூடாதல்லாவா?அதனால்தான் மோடியின் விருப்பத்திற்கு மாறாக இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறோம்.
பேங்க் வாசலில் நின்றபடியே,#நம்மில்_எத்னி_பேருக்கு_தெரியும் டீம். நன்றி.

0 comments:

Post a Comment